முதற்பக்கம் » எங்களைப்பற்றி » முன்னுரை

" எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ்வில் வளம் பெறும் வகையிலான ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும். இவ்வாறான மக்களாட்சியில் தான், ஏழைகளும், வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளைப் பெற இயலும். "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
முன்னுரை

அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுத் திட்டங்களின்பால் மக்களிடம் ஈடுபாட்டை உருவாக்கி அத்திட்டங்களின் பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணி ஆகும்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

என்னும் குறள் வழி, தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட பேரன்பால் தமிழ் இனம் மேம்படவும் தமிழ் மக்கள் வாழ்ந்திடவும் தம்மையே அர்ப்பணித்து, தமிழ் வளம் பெறவும் தமிழ் மக்கள் நலம் பெறவும் தமது சிந்தனைத்திறனை, செயலாற்றலை நேர்ந்தளித்து, தமிழகத்தின் மேம்பாட்டுக்கென அல்லும் பகலும் அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களது தலைமையில் இயங்கிடும் தமிழக அரசின் செவியாய், விழியாய்ச் செயல்பட்டு, அரசின் கொள்கைகளை, கோட்பாடுகளை, ஆற்றுகின்ற அரும்பணிகளை, வழங்குகின்ற நலத்திட்ட உதவிகளைப் பற்றி மக்கள் அனைவரும் அறியச் செய்வதும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் வளர்த்து, வெளிப்படையான நிருவாகம் மேலோங்க வழி வகுப்பதும் செய்தித்துறை ஆகும்.

அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அத்திட்டங்களால் விளையும் பயன்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி விளம்பரப் பணிகளை மேற்கொள்ளவும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.

செய்தித்துறையின் சீர்மிகு பணிகள்

  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கின்ற திட்டங்களை, அரசு வெளியிடுகின்ற அறிவிப்புகளை, ஊடகங்கள் முதலான மக்கள் தொடர்பு சாதனங்கள் வாயிலாக மக்களிடம் சேர்த்தல்
  • பொருட்காட்சிகள், புகைப்படக் கண்காட்சிகள் வாயிலாக அரசின் திட்டங்களைக் கண்ணுக்கும் கருத்துக்கும் சுவையூட்டும் காட்சிகளாய் விரியச்செய்து மக்களை உணரச் செய்தல்
  • வளர்ச்சிப் பணிகளுக்கான விளம்பரங்களை வரைகலை வடிவாய் வெளியிட்டு முன்னோடித் திட்டங்களையும் சாதனைகளையும் மக்கள் அறிந்து கொள்ள வழி வகுத்தல்
  • அரசின் சாதனைகளையும் அரும் பணிகளையும் அச்சு வடிவாக்கி அவற்றை அரசின் பருவ இதழ்களாய், சிறப்பு வெளியீடுகளாய் வெளிவரச்செய்தல்
  • சீரிய விழாக்கள் மூலம் விடுதலைப் போராட்ட தியாகிகள், தமிழ்ச் சான்றோர் மற்றும் நாட்டுக்கு உழைத்த நல்லோரின் நினைவைப் போற்றி வணங்குதல்
  • வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர் வாழ்ந்த இல்லங்களைப் பராமரித்து அவர்தம் நினைவாக நினைவுச் சின்னங்கள் உருவாக்கி அப்பெருமைமிகு தலைவர்களின் அருமை பெருமைகளை இளைய தலைமுறையினரும் பின்பற்றிட வழிவகுத்தல்
  • ஒளி - ஒலி ஊடகங்கள் வழியாக மக்கள் நெஞ்சங்களை ஊடுருவ “செய்தி மலர்கள்” தயாரித்து, கிராமங்களிலும் திரையரங்குகளிலும் திரையிடுதல்
  • திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பக் கலைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து, நாளைய திரைக்கலைஞர்களை உருவாக்குதல்

என ஆக்கப்பூர்வமான பணிகள் பல செய்து, செயலாற்றும் பணிகளை வளர்ந்து வரும் தொழில்நுட்ப உத்திகளுடன் மேம்படுத்தி, குக்கிராமங்களில் வாழ்கின்ற ஏழை எளியோரும் தலைமைச் செயலகத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும் உணர்வை உருவாக்கிச் செம்மையுறப் பணியாற்றி வருகிறது செய்தி மக்கள் தொடர்புத்துறை.

“அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”

என்னும் திருவள்ளுவரின் திருவாக்கின்படி நம்மால் முடியுமா என்று ஒருபோதும் தளர்ச்சி கொள்ளாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே நமக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இத்துறை மனதில் கொண்டு, தமிழக மக்களின் நலன் கருதி ஏழை எளிய மக்கள் பொருளாதார முன்னேற்றம் காண, சீரிய திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்புகள், கொள்கைகள், திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் சீரிய பணியைத் தொடர்ந்து தொய்வின்றி இத்துறை செய்து வருகிறது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்