முதற்பக்கம் » பிரிவுகள் » எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

"பயிற்சிதான் மனிதனை பக்குவப்படுத்தும். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பயிற்சி பெற்றால்தான் ஒருவர் தன்னுடைய பணியைத் திறமையாகவும் செம்மையாகவும் செய்ய இயலும்"

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்களையும், கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் திரைப்படம் தொடர்பான பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதாகும்.

பட்டயப் படிப்புகள்

இந்நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும் எல்லா பட்டயப் படிப்புகளுக்கும் புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அங்கீகாரம் அளித்துள்ளது. எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் கீழ்க்காணும் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இயக்குதல் மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படத்தொகுப்பு மற்றும் படம் பதனிடுதல் ஆகிய பட்டயப் படிப்புகள் மூன்று ஆண்டுக் காலத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. இயக்குதல் மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதலுக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பும், ஏனைய பட்டயப் படிப்புகளுக்கு மேல்நிலை வகுப்புத் தேர்ச்சியும் கல்வித் தகுதிகளாகும். ஒவ்வொரு பிரிவிலும் 14 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கல்விக் கட்டணமாக ரூ.15,000, சிறப்புக் கட்டணமாக ரூ.1,500, வளர்ச்சிக் கட்டணமாக ரூ.2,000, வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை பற்றிய விவரம் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூலை மாதத்தில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகின்றது.

மாணவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு நிதியுதவி

அனைத்துத் துறைகளிலும் பயிலும் மாணவர்கள் தங்களது பட்டயப்படிப்பின் இறுதி ஆண்டில் 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒரு பட்டயக் குறும்படம் வீதம் 14 பட்டயப்படங்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு ஆண்டு தோறும் பட்டயப் படிப்பு மாணவர்களின் படப்பிடிப்புத் தயாரிப்புச் செலவிற்காக நிதியுதவி அளித்து வருகிறது. இப்பட்டயக் குறும்படம் தயாரிக்கும் செலவினத்தை ஈடுசெய்ய ஒவ்வொரு குழுவிற்கும் அரசு ரூ.8,000 வழங்கி வந்தது. பட்டயக் குறும்படம் தயாரிக்க அரசு வழங்கும் இந்த தொகையை ரூ.15,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டவாறு, பட்டயக் குறும்பட தயாரிப்புச் செலவிற்காக ரூ.15,000/- வழங்கப்படுகிறது.

குறும்பட விருது

தமிழ்நாடு அரசு “எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்குக் குறும்பட விருது” என்ற பெயரில் இந்நிறுவன மாணவர்கள் தயாரிக்கும் குறும்படங்களின் சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர் மற்றும் சிறந்த படச்சுருள் பதனிடுபவர் ஆகியோருக்குத் தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5,000/- ரொக்கம் மற்றும் நினைவுக் கேடயம் வழங்கி வருகிறது.

திரைப்பட விழாக்களில் பங்கேற்க நிதியுதவி

மாணவர்களால் தயாரிக்கப்படும் பட்டயப் படங்களை தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள அனுப்பும் பொருட்டு ஆண்டுதோறும் ரூ.75,000/- தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அனிமேஷன் பட்டயப் படிப்புத் துவங்குதல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, இந்நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திரைப்படத் துறையில் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப சிறந்த முறையில் விளங்கிட ரூ.9.50 கோடி மதிப்பீட்டில், 2013 - 2014 -ஆம் கல்வியாண்டில் அணிமேஷன் மற்றும் காட்சி பயன்கள் எனும் புதிய பட்டயப்படிப்புகள் துவக்கப்படவுள்ளது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ்